Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 23 ஏப்ரல் (ஹி.ச)
திருச்சி திருவெறும்பூர் வேட்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி வரகனேரி த.செவந்திலிங்கம் முத்திரியர் உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்க தனது மனைவி ஜனனியுடன் வந்தார்.
நீண்ட வரிசையில் 25 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தார்.
அதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளரிடம் கூறுகையில்,
நான் திருவெறும்பூர் தொகுதியில் முதல் முறை போட்டியிட்டபோது என்னை திமுகவினர் அழைத்துச் சென்று வாக்குகள் சேகரிக்க வைத்தனர்.
அதற்கடுத்த தேர்தலில் பொது மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது, கடந்த முறை நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று என்னை வழிமறித்து உரிமையுடன் கேட்டனர்.
ஆனால் தற்போது 3-வது முறையாக நான் போட்டியிடுகிறேன். என்னை பொதுமக்கள் வரவேற்று, நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
ஆனாலும் எங்களுக்கு சில தேவைகள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றி கொடுங்கள் என்று உரிமையுடன் மனுக்களை கொடுக்கின்றனர்.
நான் வெற்றி பெற்ற பிறகு கண்டிப்பாக உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறேன்.
திமுக அரசின் சாதனைகள் மற்றும் நான் தொகுதிக்கு செய்திருக்கின்ற மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.
தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மக்களுடன் நெருங்கி பழகக் கூடியவர்.
அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்க கூடியவர்.
எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b