Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 23 ஏப்ரல் (ஹி.ச.)
கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர், கோயம்புத்தூர் சாலையில் உள்ள வடிவேல் நகர் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வடிவேல் நகர் வாக்குச்சாவடியில் என்னுடைய வாக்கை செலுத்தினேன். இரண்டு மாதமாக தேர்தல் பணிகள் மிக வேகமாக நடைபெற்றன. இப்போது காலையில் மக்கள் விறுவிறுப்பாக ஆர்வத்தோடு வாக்கு செலுத்தி வருகின்றனர். மக்களின் இந்த ஆர்வத்தை பார்க்கும் போது, கண்டிப்பாக அம்மாவுடைய ஆட்சி மீண்டும் அமையும். எடப்பாடி முதலமைச்சராக பதவி ஏற்பார்.
தமிழ்நாட்டில் கரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே தேர்தல் நடைபெறுகிறது. கரூரில் அதிமுக வேட்பாளர் ஆகிய நான், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். குறிப்பாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் கரூர் தொகுதியில் வெற்றி பெறுவேன்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் வன்முறை, பாலியல் வன்கொடுமை, குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டும் இல்லை, இந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல். தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி வேண்டும், இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
கரூரில் மட்டும் நோட்டீஸ் கொடுக்க கூடாது, பிரச்சாரம் செய்ய கூடாது என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு முறை தாக்கினர். நேற்று இரவும் ஒரு பகுதியில் திமுகவினர், அதிமுக தொண்டர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.
ஒரு அரசு அதிகாரியே தாக்குங்கள் என்று கூறுவது கரூரில் தான் நடக்கிறது, காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் வாக்களிப்பார்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”சினிமா மோகம் காரணமாக விஜய் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிக்கின்றனர்.
அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர்கள் வேண்டுமானால், திமுகவுக்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்று கூறிக் கொள்ளலாம்.
யாருக்கும் யாரு போட்டி என்று உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப் போவது அதிமுக தான் என்றார்
Hindusthan Samachar / ANANDHAN