Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை த்ரிஷா அபிராமபுரத்தில் உள்ள சேவியர் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் சென்று வாக்களித்தார். த்ரிஷா வாக்களித்த பின்பு அந்த வாக்குச்சாவடியில் இருந்தவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் வாக்குப்பதிவின் போது தனது கையில் மை வைக்கப்பட்டதை த்ரிஷா செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
முன்னதாக வாக்களிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் ”அனைவரும் வாக்களியுங்கள்” என கூறிவிட்டு சென்றார்.
பிரபல நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கிய த்ரிஷா சாமி, உனக்கும் எனக்கும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இன்று சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இன்று காலை முதலே திரை பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், விக்ரம், தனுஷ், ஜீவா, துருவ் விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் தங்களது வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு 11 மணி நிலவரப்படி 37.56 சதவிகிதத்தை எட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தை பொருத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகளில் 975 இடங்களில் 4085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 192 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு செலுத்த வரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாக்களிக்கும் போது வாக்காளர்களின் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வைப்பதற்கான கைபேசி வைக்கும் பைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN