Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரளாக பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை பார்த்து வரும் மக்கள், வாக்களிப்பதற்காக முன்கூட்டியே கிளம்ப முயன்றனர்.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு முதல் அதிகளவில் பயணிகள் திரண்டனர்.
ஆனால், எதிர்பார்த்த அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், பல மணி நேரம் காத்திருந்தும் பொதுமக்களுக்கு பேருந்துகள் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பயணிகள், அதிகாரிகள் மீது கண்டனம் தெரிவித்து திடீரென சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“வாக்களிப்பது எங்கள் உரிமை. அதற்காக சொந்த ஊர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று பொதுமக்கள் ஆவேசமாக கூறினர்.
இரவு முழுவதும் நீண்ட இந்த போராட்டத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூடுதல் பேருந்துகள் விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் படிப்படியாக கலைந்தது.
இந்த சம்பவம் தேர்தல் காலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பயணிகள் எண்ணிக்கையை முன்கூட்டியே கணித்து போதுமான பேருந்துகள் இயக்காதது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P