வாக்கு மை கொஞ்ச நேரத்தில் அழிகிறது - அந்தியூர் த.வெ.க வேட்பாளர் குற்றச்சாட்டு
சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச) ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 92-இல், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை சிறிது நேரத்திலேயே அழிகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Gg


சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 92-இல், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை சிறிது நேரத்திலேயே அழிகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்களித்து வெளியே வந்த சிலர், தங்களது விரலில் வைக்கப்பட்ட மை சில நிமிடங்களிலேயே மங்கிவிட்டதாகவும், இது தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடிய விஷயம் என்றும் குற்றம்சாட்டினர்.

இதனால் அந்த வாக்குச்சாவடி மையத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தவெக கட்சி வேட்பாளர் விஜய் வெங்கடேஷ் நேரடியாக வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்கு மை சரியாக இல்லாததால் தவறான வாக்குப்பதிவு அல்லது முறைகேடு நடைபெறும் அபாயம் உள்ளது என அவர் கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலதிக அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

வாக்காளர்களின் புகாரைத் தொடர்ந்து, பயன்படுத்தப்பட்ட மை குறித்து ஆய்வு செய்யவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் செயல்முறைகள் வெளிப்படையாகவும், நம்பகமாகவும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ