வேலூரில் வாக்குப்பதிவு உற்சாகம்- ரோபோ மூலம் இளம் வாக்காளர்களுக்கு வரவேற்பு
வேலூர், 23 ஏப்ரல் (ஹி.ச.) வேலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 1427 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது. காட்
ரோபோ


வேலூர், 23 ஏப்ரல் (ஹி.ச.)

வேலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் 1427 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது.

காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் காலை 7.30 மணிக்கே ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5,56,783 ஆண் வாக்காளர்கள், 5,91,881 பெண் வாக்காளர்கள் மற்றும் 165 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,48,847 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 678 இடங்களில் 1427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 149 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக மத்திய பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 6,848 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவிற்காக 1716 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் 1853 VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் முறை வாக்களிக்க வரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ரோபோ இயந்திரம் கைகுலுக்கி வரவேற்று, வாக்குச்சாவடி அறைக்கு வழிநடத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சுப்புலட்சுமி, தொரைப்பாடியில் உள்ள போதி வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam