Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்த நேரத்தில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி, மேலும் 3 அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியின் உள்ளும் வெளியும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அங்கு நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் மூன்று வகையான கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
அதன்படி, அவை முதன்மை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் மேலாண்மை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள அறை சென்னை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள் மற்றும் ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291.
2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆண்கள்
2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பெண்கள்
7,728 மூன்றாம் பாலினத்தவர்கள்
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் 85% ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்கள்-326 பேர்.
பொதுப் பார்வையாளர்கள் - 136.காவல் பார்வையாளர்கள் -40. செலவினப் பார்வையாளர்கள் - 150 பேர், நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 75.064 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 325 வாக்குச்சாவடிகளை பெண்களே நிர்வகிக்க உள்ளனர். 75 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நிர்வகிக்க உள்ளனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திரு.வி.க. நகர் தொகுதி நம்மாழ்வார்பேட்டை அரசு பள்ளியில் மட்டும் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 14.59 லட்சமாக உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பு. அதிக வாக்காளர்கள் உள்ள குடியிருப்புகளில் அங்கேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்ல ஏதுவாக மாநகர் பேருந்துகளில் இலவச பயண வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
234 தொகுதிகளில் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
300 கம்பெனி சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5,875 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135-பி பிரிவின் கீழ் சட்டமன்ற தேர்தலுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் அளிக்க மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV