எஸ்.ஐ.ஆர் திருத்தத்தால் தமிழ்நாட்டில் 84.69% வாக்குப்பதிவு – டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 84.69% வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், இந்த உயர்வுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முக்கிய காரணம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ட
84.69% Voter Turnout in Tamil Nadu Due to SIR Amendment


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 84.69% வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், இந்த உயர்வுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முக்கிய காரணம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது,

வாக்குப்பதிவு சதவீத உயர்வை மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

2021 தேர்தலில், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு, மொத்தம் 4.63 கோடி வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் எஸ்.ஐ.ஆர்-க்குப் பிறகு, பதிவான மொத்த வாக்குகள் சுமார் 4 கோடியே 82 லட்சம். அதாவது சுமார் 19 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பதிவாகியுள்ளன. எனவே, பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும், பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை .

சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சதவீதம் உயர்ந்து தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர் மாவட்டம் 89.32% வாக்குப்பதிவுடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. சேலம், ஈரோடு, தருமபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களும் 86%க்கும் அதிகமான வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளன.

தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும். புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவர். இதனால் வாக்காளர் பட்டியல் துல்லியமாகிறது.

இந்தத் திருத்தத்திற்குப் பிறகு மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறையும்போது, அதே அளவு வாக்குகள் பதிவானாலும் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்து காணப்படும் என்பது நிபுணர்களின் கருத்து.

Hindusthan Samachar / vidya.b