வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் நேரில் ஆய்வு
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.) சென்னையில் மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளை சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் இன்று நேரில் ஆய்வு செய்தார். 2026 தமி
Polling Machines


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னையில் மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு பணிகளை சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவானது நேற்று தமிழக முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். சென்னைய மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆயுதங்கள் ஏந்திய காவல் குழுவினர் மூலம் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்கின் உத்தரவின் பேரில் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் கூடுதல் காவல் ஆணையர்கள் மேற்பார்வையில் துணை ஆணையர்கள் தலைமையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய ஆயுத காவல் படையினரும் (CAPF), 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரும் (Tamilnadu Special Police), 3வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படையினரும் (Armed Reserve), 4வது அடுக்கில் சென்னை பெருநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் காவல் அதிகாரிகளுடன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.

மேலும், அங்கு மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பணிகள் மற்றும் கட்டமைப்புகளை அவர் ஆய்வு செய்தார்.

மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதும் குறித்து அவர் விசாரித்ததுடன், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளையும் வழங்கினார்.

Hindusthan Samachar / ANANDHAN