Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஏப்ரல் (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த வாக்காளர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த சொத்து விவரங்களுடன், தற்போது அவர் சமர்ப்பித்துள்ள சொத்து அறிக்கையை ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த சொத்து உயர்விற்கான உரிய ஆதாரங்கள் மற்றும் விளக்கங்கள் வேட்புமனுவில் வழங்கப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய நிதி விவரங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பிய மனுதாரர், எஸ்.பி.வேலுமணியின் சொத்து விவரங்களின் உண்மைத்தன்மையை வருமான வரித்துறை ஆரம்பகட்டமாக விசாரித்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, மேலதிக விசாரணைக்காக வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam