சென்னையில் பயணி தவறவிட்ட 3 லட்சம் மதிப்பிலான வைர வளையல் மீட்பு -ஆர்.பி.எஃப் துரித நடவடிக்கை
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச) சென்னையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கல் பதித்த தங்க வளையலை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) துரிதமாகச் செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ள
Km


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)

சென்னையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரக்கல் பதித்த தங்க வளையலை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) துரிதமாகச் செயல்பட்டு மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சாரு பிரபா என்ற பயணி, இன்று காலை சுமார் 7 மணியளவில் செங்கோட்டையிலிருந்து தாம்பரம் வரை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.

அவர் பி-3 பெட்டியில் 4ஆம் எண் இருக்கையில் பயணம் செய்ததாகவும், தாம்பரத்தில் இறங்கிய பின்னர் தனது கையில் இருந்த 10 கிராம் எடையுள்ள வைரக்கல் பதித்த தங்க வளையல் காணாமல் போனதை கவனித்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக அடுத்த ரயிலைப் பிடித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்ற அவர், அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார்.

அந்நேரம், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே காலை 6 மணிக்கே எழும்பூர் வந்தடைந்து, சுத்திகரிப்பு பணிகளுக்காக யார்டு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. தகவல் கிடைத்தவுடன், RPF வீரர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட பி-3 பெட்டியில் தீவிரமாகத் தேடுதல் நடத்தினர்.

இதன் பலனாக, பயணி தவறவிட்ட வைர வளையல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பின்னர், எழும்பூர் நிலைய வர்த்தக மேலாளர் முன்னிலையில் தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்த வளையல் அதன் உரிமையாளர் சாரு பிரபாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வையும் துரித செயல்பாடையும் எடுத்துக்காட்டுவதாக பாராட்டப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ