கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு
நீலகிரி, 24 ஏப்ரல் (ஹி.ச) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்
Kodanad murder and robbery case


நீலகிரி, 24 ஏப்ரல் (ஹி.ச)

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கோடநாடு சம்பவத்தில் காவல்துறை 10 பேரை கைது செய்த நிலையில், தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், சிபிசிஐடி போலீசாரும், அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர்.

இவ்வழக்கு தொடர்பாக குஜராத் ஆய்வகத்தில் இருந்து அறிக்கை கிடைக்கப் பெற தாமதமாவதால் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்து மகிளா நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b