Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 24 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
2026 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாற்றிலேயே அதிக உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது.
16 மாவட்டங்களில் உள்ள 52 தொகுதிகளில் சுமார் 92.98 சதவீதம் என்ற மிக உயர்ந்த வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
இது மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
நேற்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.
இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பெருமளவில் பங்கேற்றனர்.
பல இடங்களில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
சில கிராமப்புறங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அளவிலான வாக்குப்பதிவு, ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் மீது மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளதன் விளைவாகவே இத்தகைய வாக்குப்பதிவு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் அமைதியாக நடைபெற இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில போலீசாருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
நீண்ட காலத்திற்கு பிறகு எந்த உயிரிழப்பும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி என்றும் கூறினார்.
மேலும், “அங்கம், வங்கம், கலிங்கம் ஆகிய மூன்று பகுதிகளிலும் பாஜக ஆட்சி அமையும்.
மேற்கு வங்காளத்தின் வெற்றி ஒட்டுமொத்த கிழக்கு இந்தியாவுக்கும் நல்ல செய்தியாக இருக்கும்” என அமித்ஷா தெரிவித்தார்.
பாஜக ஆட்சி அமைந்தபின் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், இரவு நேரங்களிலும் பெண்கள் அச்சமின்றி சுதந்திரமாகச் செல்லும் சூழல் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA