மேற்கு வங்காளம் சட்டசபை தேர்தல் வன்முறை சம்பவங்களுக்கிடையே சாதனை - 92.72% வாக்கு பதிவு
கொல்கத்தா , 24 ஏப்ரல் (ஹி.ச.) மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட சட்டசபை தேர்தலில், வன்முறை சம்பவங்கள் இடையிலும் இதுவரை இல்லாத அளவில் 92.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை
K


கொல்கத்தா , 24 ஏப்ரல் (ஹி.ச.)

மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட சட்டசபை தேர்தலில், வன்முறை சம்பவங்கள் இடையிலும் இதுவரை இல்லாத அளவில் 92.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கான பிரசாரம் கடந்த 21-ந் தேதி மாலையுடன் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அதிகாலையிலேயே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக வாக்களித்தனர். இதனால் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

பிற்பகல் 3 மணியளவில் 78 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது 92.72 சதவீதமாக உயர்ந்தது.

வன்முறை சம்பவங்கள்

வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவியது.

தக்சின் தினாஜ்பூர் மாவட்டம் குமர்கஞ்ச் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து சர்க்கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோல் அசன்சோல் தக்சின் தொகுதியில் பா.ஜ.க. பெண் வேட்பாளர் அக்னிமித்ரா பாலின் கார் மீது கற்கள் வீசப்பட்டன. முர்ஷிதாபாத் மாவட்டம் நவோடாவில் கட்சித் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

பிர்பும், மால்டா உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முகவர்கள் தாக்கப்பட்டதாகவும், கூச்பெகர் மாவட்டத்தில் சாலை மறியல் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின

புகார்கள் – குற்றச்சாட்டு

தேர்தல் நடைபெறும் நேரத்திலேயே மதியம் 12 மணிக்குள் சுமார் 500 புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் காரணம் என பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அவற்றை ஆளுங்கட்சி மறுத்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தலை முன்னிட்டு சுமார் 2.50 லட்சம் துணை ராணுவப்படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA