Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 ஏப்ரல் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு விவகாரம் காரணமாக 10 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய ஆண் நண்பர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (33), காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கு மஹிஷா (13) என்ற மகளும், கிஷாந்த் (10) என்ற மகனும் உள்ளனர். குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், ஓமலூரில் உள்ள தனியார் டிவி ஷோரூமில் வேலை பார்த்து வந்த சத்யாவுக்கு, சக்திவேல் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சக்திவேல் சத்யாவின் வீட்டிற்குள் புகுந்து, சத்யாவையும் அவரது மகன் கிஷாந்தையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் சத்யா கடுமையாக காயமடைந்து ஒரு கை துண்டான நிலையில் உயிருக்கு போராடினார்.
10 வயது சிறுவன் கிஷாந்த் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனடியாக உறவினர்கள் இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சத்யா மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam