த.வெ.க. தலைவர் விஜய் தன்னிடம் பறவைகள் மீதம் இருந்தால் ஒப்படைக்க வேண்டும் - ‘பீட்டா இந்தியா’ கடிதம்
சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், அண்மையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்த போது தொண்டர் கொடுத்த வெள்ளைப் புறா ஒன்றை விஜய் பறக்கவிட்டார். அந்த புறாவின் இறக்கைகளில் த.வெ
PETA India Letter


சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், அண்மையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்த போது தொண்டர் கொடுத்த வெள்ளைப் புறா ஒன்றை விஜய் பறக்கவிட்டார். அந்த புறாவின் இறக்கைகளில் த.வெ.க. கொடியின் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரசாரத்தின்போது புறாவை பறக்கவிட்டது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா இந்தியா’ த.வெ.க. தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆலோசனையை பீட்டா அமைப்பு மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புறாக்கள் அதிக உணர்திறன் கொண்டவை என்றும், வண்ணம் பூசுதல், அடைத்து வைத்தல் மற்றும் கூட்டங்களுக்கு மத்தியில் திடீரென விடுவித்தல் போன்ற செயல்கள் புறாக்களுக்கு கடுமையான மன அழுத்தம், குழப்பம் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய செயல்கள், விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டம், 1960-ஐ மீறக்கூடும் என பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதோடு, த.வெ.க. தலைவர் விஜய் தன்னிடம் பறவைகள் மீதம் இருந்தால் அவற்றை மறுவாழ்வுக்காக ஒப்படைக்க வேண்டும் எனவும், பிரசார நடவடிக்கைகளில் விலங்குகளை பயன்படுத்துவதை தடைசெய்யும் தெளிவான கொள்கையை த.வெ.க. கட்சிக்குள் நிறுவ வேண்டும் எனவும் பீட்டா அமைப்பு தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b