Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 24 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் வழியாக ராஜமுந்திரி செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் தினசரி விமான சேவையை இயக்கி வருகிறது.
இந்த சேவையை தொழில் பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு கூடுதலாக மேலும் ஒரு விமான சேவையை தொடங்க இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் மே 1ஆம் தேதி முதல் புதிய விமான சேவை இயக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி – பெங்களூர் இடையேயான விமான பயண வசதி மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் நகரம் தொழில்நுட்ப மற்றும் வணிக மையமாக இருப்பதால், அந்த நகரத்துக்கு தினசரி பயணம் மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய சேவை அறிமுகப்படுத்தப்படுவது பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அவசர பயணங்கள், அலுவலக தொடர்பான பயணங்கள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பயணிப்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
மேலும், சுற்றுலா நோக்கத்திற்காக புதுச்சேரி வரும் பயணிகளுக்கும், அங்கிருந்து பிற நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த சேவை பயன்படும். புதிய விமான சேவை தொடங்கப்படுவதன் மூலம் புதுச்சேரி விமான நிலையத்தின் செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN