Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவில், எந்தத் தனித்துவமான விசாரணையும் நடத்தாமல், சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) வழக்கை முடித்துவைத்தது தவறு என்றும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
ஆணையம் தரப்பில், அதன் புலன்விசாரணைப் பிரிவு அறிக்கையும், சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கையும் பரிசீலிக்கப்பட்டு, ராம்குமார் தற்கொலை செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் வழக்கு முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ