Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச.)
டிஜிட்டல் கற்றல் தளமான ஸ்வயம் பிளஸ் (SWAYAM Plus)-ம், ஐஐடிஎம் பிரவர்தக் (IITM Pravartak)-ம் இணைந்து 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு பாடம்' எனும் பிரச்சாரத்தின் கீழ் மூன்று புதிய செயற்கை நுண்ணறிவு (AI) படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வாயிலாக, அதிநவீன டிஜிட்டல் திறனை அதிகப்படியானோருக்குக் கொண்டு செல்லும் தனது நோக்கத்தை ஸ்வயம் பிளஸ் மற்றும் ஐஐடிஎம் பிரவர்தக் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் பொறியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence for Aspiring Engineers), நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI for Administration), பொறியியல் தூண்டல் (AI for Prompt Engineering)’ ஆகிய மூன்று பாடப் பிரிவுகளே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொடக்க நிலையில் இருப்போருக்கு ஏற்ற வகையில் இந்த பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கற்க கோடிங் அல்லது செயற்கை நுண்ணறிவு குறித்த அனுபவம் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், எந்தவிதமான கல்வி மற்றும் தொழில் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், கற்கும் வகையிலேயே இந்த பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கையில் ஏஐ-யைப் பயன்படுத்தும் முறையில் கவனம் செலுத்தும் விதமாக ஐஐடி நிபுணர்களால் இது கற்பிக்கப்பட உள்ளது.
ஸ்வயம் பிளஸ் தளம் செயல்பாட்டிற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இப்பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதனை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மார்ச் 17-ல் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த அனைத்துப் படிப்புகளுக்கும் மே 10 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.
இந்த மூன்று பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கை தற்போது ஸ்வயம் பிளஸ் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதளத்திலோ அல்லது pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் கூடுதல் விவரங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள பொறியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பாடப்பிரிவு, பள்ளிக் கல்வியிலிருந்து, பொறியியல் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை திறன்களை வழங்குவதாகும்.
உண்மையான பொறியியல் தரவுத் தொகுப்புகளைக் கொண்டு பைதான் (Python), செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் படிப்பிற்கு கட்டணமாக ரூ.500 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும்.
நிர்வாகிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பாடப்பிரிவு, மேலாண்மைத் துறையில் உள்ள வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (Generative AI) ஆகியவற்றைப் பயன்படுத்தித் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு வழிவகை செய்கிறது.
இதே போல், பொறியியல் தூண்டல் பாடப்பிரிவு, துல்லியமான, அர்த்தமுள்ள முடிவுகளைப் பெறுவதற்கு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் எவ்வாறு திறம்பட உரையாடுவது என்பதைப் பயிற்றுவிக்கிறது.
இந்த பாடத்திற்கு ரூ. 100 மற்றும் ஜிஎஸ்டி, கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும். சென்னை ஐஐடி மெட்ராஸின் டீன் திட்டமிடல் ஆர். சாரதி கூறுகையில், ஸ்வயம் பிளஸ் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
தற்போது பொறியியல், BFSI (வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு), இந்திய அறிவுசார் அமைப்புகள், ஐடி, ஐடிஇஎஸ் உள்ளிட்ட 15-க்கும் அதிகமான துறைகளில் 500-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளை இத்தளம் வழங்குகிறது.
தற்போது வரை 5 லட்சத்து 50 ஆயிரத்திக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN