எந்தவொரு இடத்திலும் மறுவாக்குப்பதிவுக்கான சூழல் இல்லை - கோவை ஆட்சியர் பவன்குமார்
கோவை, 24 ஏப்ரல் (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சிங்காநல்லூர், சூலூர், தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்ற
CBE Pawan Kumar


கோவை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சிங்காநல்லூர், சூலூர், தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு அமைதியான முறையிலும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 84.76% வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக சூலூர் சட்டமன்றத் தொகுதியில் 88.31% வாக்குகளும், பொள்ளாச்சியில் 88.09% வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தடாகம் சாலையில் உள்ள கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 24) 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைத்து சீல் வைக்கும் பணிகள், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனவர் முன்னிலையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஸ்ட்ராங் ரூம்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படை வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோயம்புத்தூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமார் கிரியப்பனவர், கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இந்த தேர்தல் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்நுட்ப கல்லூரி கொண்டு வரப்பட்டு பொதுபார்வையாளர், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு இடத்திலும் மறுவாக்குப்பதிவுக்கான சூழல் இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கு தனியாக ஒரு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் பார்ப்பதற்கு தனியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேர்தல் பார்வையாளர் பிராஞ்சல் யாதவ், கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் முகவர்கள் முன்னிலையில் கிணத்துக்கடவு தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிராஞ்சல் யாதவ் முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை குறித்தும் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.

மேலும் எஸ்ஐஆர் திருத்தத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் திருப்தியாக உள்ளதா? என கேள்வி எழுப்பியதற்கு திமுக, அதிமுக முகவர்கள் வாக்குப்பதிவு திருப்தியாக இருந்ததாக தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN