8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் சரி பார்க்கப்பட்டு சீல்வைப்பு
தஞ்சாவூர், 24 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப். 23) விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தமாக 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உ
Tanjore Machines


தஞ்சாவூர், 24 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப். 23) விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், மாநிலம் முழுவதும் மொத்தமாக 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, ஒரத்தநாடு, மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சரி பார்க்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. அப்போது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதே போல், பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் மூன்று மையங்களில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சீல் வைக்கப்பட்ட கல்லூரி வளாகத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சுற்றியும் 10 அடி உயரத்திற்கு தகரங்கள் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 வளாகங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வளாகங்கள் முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய பணியும் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொகுதிவாரிய வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கும்பகோணம் 81.04 சதவீதம், ஒரத்தநாடு 82.98 சதவீதம், பாபநாசம் 80.34 சதவீதம், பட்டுக்கோட்டை 75.42 சதவீதம், பேராவூரணி 81.89 சதவீதம், தஞ்சாவூர் 77.47 சதவீதம், திருவையாறு 85.19 சதவீதம், திருவிடைமதூர் 80.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN