Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 24 ஏப்ரல் (ஹி.ச.)
கோடை விடுமுறை மற்றும் தேர்தல் நிறைவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் பக்தர்கள் திரளாக குவிந்துள்ளனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்களை ஈர்த்து வருகிறது.
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதாலும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததாலும்,நேற்று முதல் பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த பக்தர்கள், கோவில் முன்பகுதியில் உள்ள கடலில் புனித நீராடி, பின்னர் நாழிக்கிணற்றில் நீராடி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண சிறப்பு தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசை உள்ளிட்ட அனைத்து வரிசைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சீரான தரிசனத்திற்காக தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் பக்தர்கள் வருகையால் ஆன்மிக உற்சாகம் நிலவுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P