வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – சித்திரை திருவிழாவுக்கு சிறப்பு ஏற்பாடு
மதுரை, 24 ஏப்ரல் (ஹி.ச.) உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்தாண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்
வைகை


மதுரை, 24 ஏப்ரல் (ஹி.ச.)

உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்தாண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு தண்ணீர் திறப்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது 33 அடியாக மட்டுமே உள்ளதால் தண்ணீர் திறக்க முடியுமா என்ற அச்சம் இருந்தது.

மே 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வை முன்னிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறந்தால் கடும் வெயிலும் வறண்ட நிலமும் காரணமாக தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மாற்று திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி, வைகை அணையிலிருந்து பாசன கால்வாய் வழியாக மொத்தம் 170 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் சேமித்து வைக்கப்பட்டு, அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொண்டமாரி ஓடை வழியாகவும் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சோழவந்தான் பகுதியில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கும் ராமராஜபுரம் பகுதியிலிருந்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது குறைந்த அளவில் நீர் இருப்பு கொண்ட வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் மேலும் 4 முதல் 5 அடிவரை குறையக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam