அப்தாப் ரசூல் நியமனம் விவகாரம் - ஆவணங்கள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாக அப்தாப் ரசூல் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்பு வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவர் எம்.அ
High court


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாக அப்தாப் ரசூல் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்பு வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல்கான் தாக்கல் செய்த கோ-வார்ண்டோ மனுவில், மாநில வக்பு வாரியத்திற்கு அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத ஐஏஎஸ் அதிகாரியை நிரந்தர முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்ற விதி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த விதியை மீறி, சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல துணை ஆணையராக பணியாற்றிய துணைச் செயலாளர் நிலை 2 அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி அப்தாப் ரசூலை அந்தப் பதவிக்கு தமிழக அரசு நியமித்தது சட்டவிரோதம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அப்தாப் ரசூல் முதன்மை செயல் அதிகாரியாக பதவி வகிக்க தடை விதிக்கவும், இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை அந்தப் பதவியில் நியமிக்கவும், அவர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவி வகிக்கிறார் என்பது குறித்து விளக்கம் கோரவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அப்தாப் ரசூல் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் வக்பு வாரியத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் விசாரணைக்கு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ