அரை கிலோ மல்லிகை பூவுக்கு ரூ.13 கட்டணம்- அரசு பேருந்து நடத்துனர் மீது மேலூர் விவசாயிகள் குற்றச்சாட்டு
மதுரை, 25 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட கேசம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ், தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை விற்பனைக்காக எடுத்துச் செல்ல, சிறுகுடியில் இருந்து மேலூர் நோக்கி இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந
மல்லி


மதுரை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட கேசம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்தோஷ், தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை விற்பனைக்காக எடுத்துச் செல்ல, சிறுகுடியில் இருந்து மேலூர் நோக்கி இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது, அவர் எடுத்துச் சென்ற அரை கிலோ மல்லிகை பூவிற்கே நடத்துனர் ரூ.13 சரக்கு கட்டணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.

போக்குவரத்துத் துறை விதிமுறைகளின்படி, 10 கிலோ எடைக்கு மேற்பட்ட சரக்குகளுக்கு மட்டுமே ரூ.13 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

ஆனால், வெறும் அரை கிலோ மல்லிகை பூவிற்கே அதே அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுகுறித்து விவசாயி விளக்கம் கேட்டபோது,

நடத்துனர் முறையற்ற முறையில் பதிலளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மல்லிகை பூவை விற்பனைக்காக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற கூடுதல் கட்டண வசூலால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட போக்குவரத்துத் துறை மேலாளரிடம் கேட்டபோது, சம்பவத்திற்கான உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P