Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
பின்னர், அதே வாகனத்தில் அழைத்து வந்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பல நேரங்களில் வெளி மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சில நேரங்களில், பயங்கர ரவுடிகள் மற்றும் கொடூர குற்றவாளிகளை வாகனங்களில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ பாதுகாப்புக்காக உடன்வரும் போலீஸாருடன் வீண் தகராறில் ஈடுபடுகின்றனர்.
சிலசமயம் போலீஸார் தாக்கப்படுகின்றனர். ஆனால், இதன் உண்மைத் தன்மை வெளிவருவது இல்லை. யார் மீது தவறு? தாக்குதல் நடந்ததற்கு என்ன காரணம் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது கைதிகளின் உறவினர்கள் கஞ்சா பொட்டலங்களை காவல் வாகனங்களில் வீசும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இத்தகைய பிரச்சினைகளைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தியதில், கைதிகளை அழைத்துச் செல்லும் காவல் வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் சிறைக் கைதிகளை அழைத்துச் செல்லும் 50-க்கும் மேற்பட்ட காவல் வாகனங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b