Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் வாக்குப் பெட்டிகள் காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இதில் லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகள் ஸ்ட்ராங் ரூமில் அனைத்து கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நான்கு அடுக்குகளாக மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு படையினர், ஆயுதப்படை மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் உள்ளிட்ட மொத்தம் சுமார் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பணியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளையும் அனைத்து கட்சி முகவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் கல்லூரி வளாகத்திற்குள் சென்றது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் த.வெ.க நிர்வாகிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முறையான அனுமதி கடிதம் இல்லாமல் அடையாள அட்டையுடன் உள்ளே செல்ல அனுமதி கோரிய அவர்களை போலீசார் தடுத்து, விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.
இதனால் ஏற்பட்ட சிறிய பரபரப்பு பின்னர் அடங்கியது.
Hindusthan Samachar / GOKILA arumugam