Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன்படி நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழ்விடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி வரையாடுகளின் மொத்த எண்ணிகையில் 42 சதவீதம் ஆனைமனை புலிகள் காப்பகத்தில் உள்ளன. இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுப்பு பணியை தமிழ்நாடு, கேரளா வனத்துறையினர் இணைந்து, இன்று (ஏப்.25) முதல் 27ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார், மங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் ஒரு வனவர், ஒரு வனக்காப்பாளர், இரண்டு வேட்டை தடுப்பு காவலர் என நான்கு பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பில் வரையாடுகளில் எச்சம், கால் தடம் ஆகியவற்றை நேரில் பார்த்தும், அதனை ஜிபிஎஸ் கருவி மூலம் பதிவு செய்தும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டில் 176 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு கருப்பு நிற ரோமங்கள் மற்றும் வளைந்த கொம்புகள் கொண்டதாகும். நீலகிரி வரையாடுகளுக்கு வருடந்தோறும் டிசம்பர், ஜனவரி மாதங்கள் பிரசவ காலம் ஆகும்.
இந்த வரையாடுகள் தமிழ்நாடு மற்றும் கேரள வனப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் வருடந்தோறும் அக்டோபர் 7 ஆம் தேதி வரையாடு தினம் கொண்டாடப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN