Enter your Email Address to subscribe to our newsletters

கலிபோர்னியா, 25 ஏப்ரல் (ஹி.ச.)
ஓபன்ஏஐ மற்றும் இணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் அசல் நோக்கத்தை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம்சாட்டி எலான் மஸ்க் தொடர்ந்த வழக்கில், அவரது மோசடி குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எனினும், அறக்கட்டளை நம்பிக்கையை மீறியது மற்றும் நியாயமற்ற முறையில் செல்வம் சேர்த்தது உள்ளிட்ட மற்ற குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தொடரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் அமெரிக்க மாவட்ட நீதிபதி இவான் கோன்சாலஸ் ரோஜர்ஸ் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
ஜூரி தேர்வு ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆரம்ப வாதங்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாப நோக்கம் கொண்ட நிறுவனத்தை உருவாக்கியதன் மூலம் ஓபன்ஏஐ, ஆல்ட்மேன் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியோர் தன்னையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தியதாக மஸ்க் வாதிடுகிறார்.
மோசடி குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், ஓபன்ஏஐ மனிதகுலத்திற்கு பயனளிக்க வேண்டும், வெறும் 'செல்வம் ஈட்டும் இயந்திரமாக' இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் மஸ்க்கின் பரந்த வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
ஓபன்ஏஐ-யின் அறக்கட்டளை பிரிவுக்கு வழங்கப்பட வேண்டும் என 150 பில்லியன் டாலர் இழப்பீடு கோரி மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b