Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 25 ஏப்ரல் (ஹி.ச.)
மகள் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தனியார் தொலைக்காட்சி நிர்வாகி இந்திராணி முகர்ஜி, அவசர காரணங்களுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் விசாரிக்க மறுத்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, எந்தவொரு நிவாரணமாக இருந்தாலும் இந்திராணி முகர்ஜி விசாரணை நீதிமன்றத்தையே அணுக வேண்டும்.
இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை.
இருப்பினும், அவசர தேவையை முன்னிட்டு அவர் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், அந்த நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மகள் ஷீனா போரா கொலை வழக்கில் 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி, 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.
பின்னர் 2022-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
கடந்த ஆண்டு வெளிநாடு செல்ல சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
ஆனால் சி.பி.ஐ. மேல்முறையீட்டின் பேரில் மும்பை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.
வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர் வெளிநாடு சென்றால் மீண்டும் திரும்புவதற்கான உத்தரவாதம் இல்லை என்ற காரணத்தால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA