Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 25 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நடந்த இரண்டு சம்பவங்கள் தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலைக்குச் சம்பந்தப்பட்ட பழிவாங்கும் சம்பவமாக இன்றைய கொலை பார்க்கப்படுகிறது.
பிராந்தை பகுதியைச் சேர்ந்த காவியா என்ற இளம் பெண்ணுக்கு, குடும்பத்தினர் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், அவரது காதலன் அஜித்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினை தீவிரமாகி, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், காவியா பள்ளிக்குச் செல்லும் போது நடுரோட்டில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அஜித்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சட்டநடவடிக்கைகளின் மூலம் அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மகளை இழந்த துயரத்திலும் கோபத்திலும் இருந்த காவியாவின் குடும்பத்தினர், இந்த கொலைக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை, அஜித்குமார் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் வீட்டுக்குள் புகுந்து, அவரை சரமாரியாக தாக்கி வெட்டி கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொலைக்கு தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேர், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நேரடியாக சென்று சரணடைந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு கொலைக்கு பதிலாக மற்றொரு கொலை நடைபெறுவது சமூகத்தில் ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
சட்டத்தை தங்களது கையில் எடுத்துக்கொண்டு பழிவாங்கும் மனப்பான்மை அதிகரித்தால், அது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பதையும் இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
தற்போது இந்த வழக்கில் போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN