Enter your Email Address to subscribe to our newsletters

திருத்தணி, 25 ஏப்ரல் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெக்களூர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பைப் லைன்கள் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் சேமித்து கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தெக்களூரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளதால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை புகார் செய்ததாக கூறப்படுகிறது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக தெக்களூர் கிராமத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு திரும்பி சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b