Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்பகுதியில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மிகக் குறைந்த உயரத்தில் பறந்த சம்பவம் கடுமையான பாதுகாப்பு மீறல் என கேரள மாநில கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் (ADGP) ஸ்ரீஜித் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயிலின் மீது சில அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சபரிமலை சிறப்பு ஆணையர் கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில், சபரிமலை கோயிலின் மேலே கடலோர காவல் படை ஹெலிகாப்டர் பறந்தது மிகக் கடுமையான பாதுகாப்பு விதிமுறை மீறல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹெலிகாப்டர் பறந்ததற்கு வானிலை காரணம் என கடலோர காவல் படை அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து முழுமையான தகவல்களை சேகரிக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹெலிகாப்டரை இயக்கிய விமானிகளிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை.
அதேபோல், சபரிமலைக்கு அருகிலுள்ள நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கே, அது வி.வி.ஐ.பி. பயணமாக இருந்தாலும், முன் அனுமதி கட்டாயமாகும். இத்தகைய கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், கோயிலின் மீது ஹெலிகாப்டர் பறந்தது மிகுந்த கவனத்திற்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான சிறப்பு ஆணையரின் அறிக்கை ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் டிஜிபி ஸ்ரீஜித்தின் விரிவான அறிக்கையும் விரைவில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P