Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 25 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய இணை மந்திரியும், அவிநாசி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல். முருகன், அவிநாசி தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளது, அவர்களது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.
தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அவிநாசி தொகுதியில் எனக்கு 100 சதவீத வெற்றி உறுதி. சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
எங்களது வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் பதிவான அதிக வாக்கு சதவீதம், தி.மு.க. அரசின் மீது மக்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
மக்கள் அரசுக்கு எதிராகவே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குப்பதிவு ஆகும்.
செல்வப்பெருந்தகை வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து அதிகாரிகளே பதில் அளிக்க வேண்டும்.
பா.ஜ.க. மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் பா.ஜ.க.வுக்கு வருகிறார்கள்.
மேலும் ‘திராவிட மாடல் 2.0’ என்பது வெறும் ‘ஜீரோ’ என்றும், தி.மு.க. அரசை அகற்றவே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA