Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
வக்பு வாரிய பாதுகாப்புக்குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான்,வக்பு வாரியத்துக்கு இணைச் செயலாளர் அந்தஸ்தி்ல் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்களை கண்காணித்து பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் முதன்மை செயல் அதிகாரிக்கே உள்ளது.
ஆனால் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணிபுரிந்த முன்னாள் முதன்மை செயல் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பலர் தங்களுக்குள் கூட்டணி அமைத்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்களுக்கு சட்டவிரோதமாக தடையில்லா சான்று வழங்கி அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தொடர்பாகவும், தவறு செய்த வக்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அந்த வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வக்பு வாரிய திருத்தச் சட்டப்படி மாநில வக்பு வாரியத்துக்கு தமிழக அரசின் இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத ஐஏஎஸ் அதிகாரியை நிரந்தர முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
ஆனால் தமிழக அரசு துணைச் செயலாளர் கிரேடு -2 அந்தஸ்தில் உள்ள சென்னை மாநகராட்சியில் அடையாறு மண்டல துணை ஆணையராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியான அப்தாப் ரசூல் என்ற அதிகாரியை வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாக கடந்தாண்டு மே மாதம் நியமித்துள்ளது.
இது வக்பு வாரிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் அப்தாப் ரசூல் வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாக பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும்.
அத்துடன் வக்பு வாரியத்துக்கு இணைச் செயலாளர் அந்தஸ்தி்ல் உள்ள ஐஏஎஸ் அதிகாரியை முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம். ராமமூர்த்தி ஆஜராகி வாதி்ட்டார்.
அதையடுத்து நீதிபதி எந்த அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரியான அப்தாப் ரசூல் வக்பு வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்களை 4 வார காலத்துக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b