Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் டான்ஃபெட் நிறுவனத்துக்கு
(Tamil Nadu Cooperative Marketing Federation) பொது தகவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை வழங்க மறுத்தது ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜோதிபாசு என்பவர், டான்ஃபெட் நிறுவனம் எந்த நிறுவனங்களிடமிருந்து, எந்த முறையில் உரங்களை கொள்முதல் செய்கிறது என்பது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்திருந்தார்.
ஆனால், கூட்டுறவு சங்கங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறி, அந்த நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி தகவல் வழங்க மறுத்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், டான்ஃபெட் நிறுவனம் தமிழக அரசின் நிர்வாகம், நிதி மற்றும் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், தகவல் உரிமைச் சட்டம் அதற்கு பொருந்தும் என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், தகவல் வழங்க மறுத்த தகவல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், மனுதாரர் கோரிய தகவல்களை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு டான்ஃபெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ