Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 25 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உக்கடை வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், அங்கு நிலைமையை பார்வையிட சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ்பாத்திமா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர், அம்மாபேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்புடையவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வாக்குச்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam