கம்பத்தில் தனியார் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தேனி, 25 ஏப்ரல் (ஹி.ச.) தேனி மாவட்டம் கம்பம் அருகே தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் உத்தப்புரம் பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செயல்பட்டு
பட்டாசு


தேனி, 25 ஏப்ரல் (ஹி.ச.)

தேனி மாவட்டம் கம்பம் அருகே தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் உத்தப்புரம் பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த குடோன், லட்சுமி பட்டாசு கடை உரிமையாளர் திருப்பதிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கம்பத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெடிவிபத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், அவர்களின் உடல்கள் சிதறி சின்னாபின்னமானது.

ஒரு உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரின் உடல் பாகங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தங்களது உயிரையும் பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு உத்தமபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று, மீட்பு மற்றும் விசாரணைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P