திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தெப்பத்திருவிழா- தெப்பம் கட்டும் பணிகள் தீவிரம்
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, பிரமாண்ட தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் போற்ற
தேர்


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, பிரமாண்ட தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர் கோவில், பல்வேறு சிறப்பு விழாக்களால் உலகப் புகழ் பெற்றது.

இக்கோவிலின் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆசியாவின் மிகப்பெரிய தேராக போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆழித்தேரோட்டம் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கமலாலயக் குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழாவும் பக்தர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். கோவில் மற்றும் கமலாலயக் குளம் தலா 5 வேலி பரப்பளவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

மகாலட்சுமி தவம் புரிந்த புண்ணியத் தலமாக கருதப்படும் கமலாலயக் குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கவர்கிறது.

இந்த ஆண்டுக்கான தெப்பம் 50 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டதாக, மொத்தம் 2,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இதன் அடித்தளமாக 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி, அவற்றை இரண்டு அடுக்குகளாக கட்டி, நீரில் மிதக்கும்வகையில் அமைக்கப்படுகிறது. சுமார் 18 அடி உயரம் கொண்ட இந்த தெப்பத்தில் ஒரே நேரத்தில் சுமார் 500 பேர் அமரக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த பிரமாண்ட தெப்பம், இரவு நேரங்களில் கமலாலயக் குளத்தில் மிதந்து செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கும் தெப்ப உற்சவத்தில், தெப்பம் குளத்தை மூன்று முறை வலம் வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா வருகிற மே 8ஆம் தேதி தொடங்கி, மே 10ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, காலி பேரல்களில் காற்று நிரப்பி அவற்றின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டு, பின்னர் மரப்பலகைகள் மற்றும் மூங்கில்கள் இணைக்கப்பட்டு பிரமாண்ட தெப்பம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த தெப்பத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூரில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P