Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான பாடநூல் தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள் கிடைக்கச் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 44 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டிற்காக மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், இதுவரை சுமார் 88 சதவீத பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் மாவட்ட அளவிலான கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடநூல்கள் ஏற்கனவே மாவட்டக் கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், அந்தப் பாடநூல்கள் இறுதிக்கட்ட அச்சிடும் பணியில் உள்ளன. அவையும் விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பாடநூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், தனியார் பள்ளி மாணவர்களும் குறைந்த விலையில் பாடநூல்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P