Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 ஏப்ரல் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் சரத்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கானது நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று (25.04.2026) விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறுகையில்,
திருநங்கைகள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டோராகவே உள்ளனர். திருநங்கைகளில் பிறப்பில் குறையில்லை. அவர்கள் மீதான சமூக அணுகுமுறையிலேயே குறையுள்ளது.
திருநங்கைகளின் தேவைக்கு ஏற்ப நலத்திட்டங்களை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்தவும் உத்தரவிடப்படுகிறது.
சுயதொழில் வாய்ப்பு, நிலையான வாழ்வாதாரம், மாண்புமிக்க வாழ்க்கையை உருவாக்க வேண்டும். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
திருநங்கைகளும் மனிதர்களே, அவர்களின் மரியாதை, மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். திருநங்கைகளை சமூகமே புறக்கணிப்பது, அவர்களை வறுமை நிலைக்குத் தள்ளுவது சமூகத்தின் தோல்வி ஆகும். திருநங்கைகளின் மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். திருநங்கைகளும் கடவுளின் பிள்ளைகளே.
அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள். திறமையோடு வாழ்பவர்கள். திருநங்கைகள் சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சமூகமே அவர்களைப் புறக்கணிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b