வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும். நாளொன்றுக்கு வழக்கமாக 8,000 முதல் 10,000 டன் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு வரும்.
Vegetable prices rise at Koyambedu Market


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும். நாளொன்றுக்கு வழக்கமாக 8,000 முதல் 10,000 டன் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு வரும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களும், சில்லறை மற்றும் மொத்த காய்கறி விற்பனை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், தமிழகம் முழுவதும் தற்போது நிலவும் கடும் கோடை வெயில் காரணமாக காய்கறிகளின் வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளும், கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, கடந்த வாரங்களில் மொத்த விற்பனையில் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, கேரட் மற்றும் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 முதல் 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 40 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 30 முதல் 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 20 முதல் 30 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அவரைக்காய் 60 ரூபாய்க்கும் கத்திரிக்காய் 25 ரூபாய்க்கும் பூண்டு 160 ரூபாய்க்கும் இஞ்சி 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரும் நாட்களில் வெயில் தாக்கம் நீடித்தால், விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b