Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 25 ஏப்ரல் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், போதையில் காரை ஓட்டிய இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்ததுடன், சுமார் 10 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வில்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (41), நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாகவும் தாறுமாறாகவும் வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட முருகனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சின்னமுதலியார் சாவடி அருகே சாலை ஓரமாக நடந்து சென்ற மணிகண்டன் (40) மற்றும் பிரபு (45) ஆகியோரையும் அதே கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் போலீசார், காரை தடுக்க முயன்றனர்.
ஆனால், காரில் இருந்தவர்கள் போலீசாரின் தடுப்புகளை இடித்துத் தள்ளி, அங்கிருந்த மேலும் இருவரின் மீதும் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து, மரக்காணம் அருகே பொதுமக்கள் காரை மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்தவர்கள் கடும் போதையில் இருந்தது தெரியவந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த முகிலன் (22), தூத்துக்குடியைச் சேர்ந்த திவாகர் (22), செங்கல்பட்டைச் சேர்ந்த ஸ்ரீநிதி (20), அதிமேகா (20) ஆகிய இரு ஜோடிகள் காரில் பயணம் செய்துள்ளனர்.
பொதுமக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த 5 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதையில் வாகனம் ஓட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P