Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையை தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை தொடர்பான பல்வேறு விஷயங்களை விளக்கினார்.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஸ்ட்ராங் ரூம்களை வேட்பாளர்கள் நேரில் பார்வையிட வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு சுற்றிலும் நேர்மையான முறையில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
வில்லிவாக்கம் தொகுதியில் 28 வேட்பாளர்கள் உள்ள நிலையில், லயோலா கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள் மிகவும் குறுகலாக உள்ளதால், ஒவ்வொரு சுற்றிலும் 5 பேருக்கும் மேல் நிற்க முடியாத சூழல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தேவையான கால அவகாசம் வழங்கி முறையாக வாக்கு எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுவரை லயோலா கல்லூரியில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வாக்கு எண்ணும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தலைவர் விஜய் தினமும் ஆலோசனை செய்து வருகிறார் என்றார். வாக்கு எண்ணும் நாளில் அலுவலர்கள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்த அவர், திமுக தோல்வி பயத்தில் இறுதி நேரத்தில் வன்முறைக்கு முயன்றதாக குற்றம்சாட்டினார்.
துறைமுகம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆதரவாளர்களுடன் வந்து அச்சுறுத்தியதாகவும், சைதாப்பேட்டையில் கட்சியின் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் இறுதி நேரத்தில் பணம் வழங்கியதாக திமுக மீது குற்றம் சாட்டிய அவர், மக்கள் பணத்தை நிராகரித்து மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் வேட்பாளர்கள் சுழற்சி முறையில் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ