அன்னூர் அருகே கோர விபத்து - திமுக நிர்வாகி உள்பட 2 பேர் பலி, 8 பேர் காயம்
கோவை, 26 ஏப்ரல் (ஹி.ச) கோவை – சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் திமுக நிர்வாகி உள்பட 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் பகுதியைச் சேர்ந்த பாப்பம்பட்டி க
Nn


கோவை, 26 ஏப்ரல் (ஹி.ச)

கோவை – சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் திமுக நிர்வாகி உள்பட 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் பகுதியைச் சேர்ந்த பாப்பம்பட்டி கிளைத் திமுக செயலாளரான கதிரேசன் (45) தனது நண்பர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் பயணித்த கார் அன்னூர் அருகே வந்தபோது, எதிரே வந்த தண்ணீர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து காரில் மோதியது.

இந்த மோதி ஏற்பட்ட தாக்கம் மிகுந்ததாக இருந்ததால், கார் கடுமையாக சேதமடைந்தது. இதில் கதிரேசன் மற்றும் அவரது நண்பர் வேல்முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காரில் இருந்த 7 குடும்பத்தினரும் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தண்ணீர் லாரியை ஓட்டி வந்த அதன் உரிமையாளரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடல்கள் உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

தண்ணீர் லாரி அதிக வேகத்தில் வந்ததா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த திடீர் விபத்து அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ