Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 26 ஏப்ரல் (ஹி.ச.)
மீன்பிடித் தடைக்காலம் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், தற்போது நாட்டுப்படகுகள் மூலம் பிடித்து வரப்படும் மீன்களே சந்தைக்கு வருகின்றன. வார விடுமுறை நாளை முன்னிட்டு இன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆழ்கடலில் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. அதேநேரம், பள்ளி விடுமுறை காலம் என்பதால் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவு மற்றும் அதிக தேவை காரணமாக மீன்களின் விலை வழக்கத்தை விடக் கூடுதலாகக் காணப்பட்டது.
மீன் விலை நிலவரம் (கிலோவில்): சீலா மீன் ரூ. 1,100 முதல் ரூ. 1,200 வரை, விளை, ஊழி, பாறை: ரூ. 500 முதல் ரூ. 600 வரை, நண்டு ரூ. 700 வரை, கிழவாலை, சூரை, கேரை: ரூ. 250 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.2,500, வங்கனை ரூ. 3,000, முண்டக்கண்ணி பாறை ரூ. 2,000 (ஒரு கூடை) வரையும் விற்பனை ஆனது.
மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்ட போதிலும், அசைவப் பிரியர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். இதனால் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் வாரங்களிலும் மீன்களின் விலை இதே நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b