Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையில் அமைந்துள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், ஆண்டுதோறும் அமலில் இருக்கும் மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை பாதுகாக்கும் நோக்கில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், காசிமேடு துறைமுகத்திலிருந்து குறைந்த தூரம் மட்டுமே சென்று பைபர் படகுகள் மூலம் சிறிய வகை மீன்கள் பிடித்து வரப்படுகின்றன.
இந்த நிலையில், விடுமுறை தினத்தை ஒட்டி இன்று அதிகாலை முதலே மீன் சந்தையில் பொதுமக்கள் திரளாக குவிந்து மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
சந்தையில் கானாங்கத்தை, இறால், நண்டு, பண்ணா, சங்கரா, கொடுவா, வலை மீன், நவரை, கடுமா, நெத்திலி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் விற்பனைக்கு வந்தன. குறைந்த வரத்து காரணமாக மீன்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.1,100க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ரூ.600க்கு விற்கப்பட்ட கொடுவா மீன் தற்போது ரூ.1,000க்கு உயர்ந்துள்ளது.
மேலும், தேங்காய் பாறை ரூ.900, ஷீலா மற்றும் பால் சுறா ரூ.800, சங்கரா ரூ.500, பாறை ரூ.400, இறால் ரூ.400, நண்டு ரூ.300, நவரை ரூ.400, பண்ணா ரூ.400, காணங்கத்தை மற்றும் கடுமா ரூ.500, நெத்திலி ரூ.400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
காசிமேட்டில் ஏல முறையில் வாங்கப்பட்ட மீன்கள் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam