குடிநீர் கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கரூர், 26 ஏப்ரல் (ஹி.ச.) கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வீரவல்லி கிராமத்தில், கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் த
மறியல்


கரூர், 26 ஏப்ரல் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட வீரவல்லி கிராமத்தில், கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே அமர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஊராட்சி நிர்வாகம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் விரைவில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P