கோலாகலமாக தொடங்கிய திருச்சூர் பூரம் பெருவிழா - வண்ணமய யானை அணிவகுப்பால் பக்தர்கள் பரவசம்
திரிச்சூர், 26 ஏப்ரல் (ஹி.ச.) திரிச்சூர் பூரம் எனும் உலகப் புகழ்பெற்ற திருவிழா, கேரள மாநிலத்தின் திருச்சூரில் அமைந்துள்ள வடக்கு நாதன் கோவில் வளாகத்தில் கோலாகலமாக தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்க
பூரம்


திரிச்சூர், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திரிச்சூர் பூரம் எனும் உலகப் புகழ்பெற்ற திருவிழா, கேரள மாநிலத்தின் திருச்சூரில் அமைந்துள்ள வடக்கு நாதன் கோவில் வளாகத்தில் கோலாகலமாக தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் திரண்டுள்ளனர்.

கேரளாவின் மிக முக்கியமான கோவில் திருவிழாக்களில் ஒன்றாக விளங்கும் திருச்சூர் பூரம், ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, பரமேகாவு பகவதி அம்மன் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா கோவில்ஆகிய கோவில்களின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

பூரம் விழாவையொட்டி கடந்த சில நாட்களாகவே யானைகளின் ஆடை, ஆபரண அலங்கார அணிவகுப்புகள், செண்டை மேளங்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன.

அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மீது தெய்வங்கள் எழுந்தருளி நகர்வலம் வருவது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இன்றைய முக்கிய பூரம் நிகழ்வில் 15-க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகள் பங்கேற்றுள்ளன.

அவற்றில் திருக்கடவூர் சிவராஜ், தெச்சிக்கோட்டு காவு ராமச்சந்திரன், குருவாயூர் நந்தன், திருவம்பாடி சந்திரசேகரன், எர்ணாகுளம் சிவகுமார், பாம்பாடி சிவராஜன் உள்ளிட்ட பிரபல யானைகள் இடம் பெற்றுள்ளன.

வண்ணமயமான குடைமாற்று நிகழ்ச்சி, பாரம்பரிய செண்டை மேளம், கண்கவர் யானை அணிவகுப்பு ஆகியவை திருவிழாவின் சிறப்பை மேலும் உயர்த்தி வருகின்றன.

கேரளா முழுவதும் இருந்து மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சூரில் குவிந்துள்ளனர்.

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சடங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சூர் நகரமே தற்போது திருவிழா கோலத்தில் ஒளிர்கிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P