கொடைக்கானலில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் - சுற்றுலாப் பயணிகள்,பொதுமக்கள் அவதி
கொடைக்கானல், 26 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய மலைவாசஸ்தலமான கொடைக்கானல் நகரில், தரைப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலிலிருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்ததால், இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வரு
கொடைக்கானல்


கொடைக்கானல், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய மலைவாசஸ்தலமான கொடைக்கானல் நகரில், தரைப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலிலிருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்ததால், இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கமாகும்.

குறிப்பாக கோடை காலத்தில், குளிர்ச்சியான காலநிலையை அனுபவிக்க குடும்பத்துடன் பலர் கொடைக்கானலை நாடி வருகின்றனர்.

தற்போது தரைப்பகுதிகளில் வெயில் தீவிரமடைந்துள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நகரின் பிரதான சாலைகள், ஏரி சாலை மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து செல்கின்றன.

நேற்று முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவிய நிலையில், இன்று காலை முதலே மீண்டும் அதே நிலை தொடர்கிறது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக நகரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உள்ளூர் மக்களும் தங்களது அன்றாட பணிகளுக்குச் செல்ல சிரமம் அனுபவித்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வரும் நாட்களிலும் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P